உக்ரைன் நாட்டின் கிழக்கு மாகாணங்களான டொனேட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் மாகாணங்களை தனி நாடாக அங்கீகரித்த ரஷ்யா அதிபர் புடின் அந்த பிராந்திய கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக ரஷ்ய படைகளை அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே கடந்த இரண்டு மாதங்களாக நிலவி வந்த போர் பதற்றம் ரஷ்ய அதிபரின் இந்த உத்தரவால் உச்சத்தை எட்டியுள்ளது.
உக்ரைன் எல்லையில் இருந்து தனது படைகளை வாபஸ் பெற்று வருவதாக ரஷ்யா கடந்த வாரம் கூறிய நிலையில், உக்ரைன் எல்லையோர மாகாணங்களில் உள்ள ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும் உக்ரைன் படையினருக்கும் இடையே சண்டை மூண்டது.
டொனேட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய பகுதிகளில் இருந்த மக்கள் அனைவரும் ரஷ்யா-வுக்குள் தஞ்சமடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து இவ்விரு பகுதிகளின் கிளர்ச்சியாளர்களை அங்கீகரித்த அதிபர் புடின் டொனேட்ஸ்க் மக்கள் குடியரசு மற்றும் லுஹான்ஸ்க் மக்கள் குடியரசு ஆகிய இந்த இரண்டு தனி நாடுகளுக்கு ஆதரவாக ரஷ்ய படைகளை அந்தப் பகுதிக்குள் அனுப்பி வைத்திருக்கிறார்.
டொனேட்ஸ்க் மக்கள் குடியரசு (Donetsk People’s Republic – DPR) மற்றும் லுஹான்ஸ்க் மக்கள் குடியரசு (Luhansk People’s Republic – LPR) ஆகிய பகுதிகளில் நிலவி வரும் பதற்றத்தை தனித்து அமைதியை நிலைநாட்ட ரஷ்ய படைகள் செயல்படும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
இந்நிலையில், உக்ரைன் மண்ணில் ரஷ்ய படைகள் காலடி வைக்க முடியாது எங்கள் மண்ணில் ஒரு அடி கூட நாங்கள் விட்டுத் தர முடியாது என்று உக்ரைன் கூறியுள்ளது.
ரஷ்யாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, நேட்டோ உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
உக்ரைன் விவகாரத்துக்கு இடையே புடின் அழைப்பு… ரஷ்யா செல்கிறார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்