பெங்களூரூ:
ர்நாடகாவின் ஷிவமோக்கா மாவட்டத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்கு செல்ல அனுமதிக்கக் கோரி போராட்டம் நடத்திய 58 மாணவிகள் இன்று இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்ட பியூ கல்லூரிகளில் ஹிஜாப்புக்கு எதிராக போராட்டம் துவங்கியது. ஹிஜாப்புக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் அடுத்தடுத்து போராட்டங்கள் நடந்தன. ஹிஜாப்புக்கு போட்டியாக சிலர் காவிஷால் அணிந்து கல்லூரிகளுக்கு சென்றனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. மேலும், கர்நாடக அரசும் பள்ளி, கல்லூரிகளில் சீருடை முறை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டது. கல்லூரிகளில் ஹிஜாப் தடை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உடுப்பி மாவட்ட கல்லூரி மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தொடர்ந்து விசாரித்து வருகிறது. கடந்த வார விசாரணையின்போது, ‛‛வழக்கு விசாரணை முடியும்வரை பள்ளி, கல்லூரிகளில் மதம்சார்ந்த ஆடைகளை அணியக்கூடாது” என நீதிபதிகள் இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்.

இதையடுத்து ஹிஜாப் பிரச்சனையால் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டன. பிப்., 14ல் 10 வகுப்பு வரை பள்ளிகளும், பியூ, டிகிரி கல்லூரிகள் பிப்.,16 முதலும் செயல்பட துவங்கின. முன்னெச்சரிக்கையாக பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளை சுற்றி 200 மீட்டருக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருகின்றனர். இவர்களை பள்ளி நிர்வாகத்தினர் தடுத்து ஹிஜாப்பை அகற்ற வலியுறுத்துகின்றனர். இதற்கு சில மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்து திரும்பி செல்கின்றனர். இதுதொடர்பாக வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஹிஜாப் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து துமகூருவில் கல்லூரி விரிவுரையாளர் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் சிவமொக்கா மாவட்டம் சிரளகொப்பாவில் உள்ள பப்ளிக் பள்ளி வளாகத்தில் நேற்று தடையை மீறி மாணவிகள் போராட்டம் நடத்தினர். ஹிஜாப் அணிய அனுமதிக்க வேண்டும். இது எங்களின் அடிப்படை உரிமை என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியிருந்தனர். மேலும், ‛‛ஹிஜாப் அணிவது எங்களின் உரிமை. நாங்கள் இறந்தாலும் கூட ஹிஜாப் உரிமையை விட்டு கொடுக்க மாட்டோம்” என கோஷமிட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்தவுடன் தாசில்தார், போலீசார், கல்வித்துறை அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். கர்நாடக ஐகோர்ட்டின் இடைக்கால உத்தரவு, 144 தடை உத்தரவு பற்றி எடுத்து கூறினர். ஆனால் அவர்கள் கண்டுக்கொள்ளாமல் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து அவர்கள் அனைவரும் அப்புறப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 58 மாணவிகளை சஸ்பெண்ட் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் தடையை மீறி போராட்டம் நடத்தியதாக வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.