சென்னை: தமிழ்நாட்டில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், காலை 9மணி வரை 8.21% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாகவும், பதற்றமான 5,960 வாக்குச்சாவடிகள் வெப்-ஸ்ட்ரீம் மூலம் கண்காணிப்பு செய்யப்பட்டு வருவதாகவும், மாநில தேர்தல் ஆணையர்  பழனிக்குமார் தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தநிலையில்,செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் ஆணையர்,  பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன என்றும்,  இந்த தேர்தல் வாக்குப்பதிக்காக 30 ஆயிரத்து 235 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருக்கிறது, அவற்றில்  5,960 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுஉள்ளது.  அந்த பதற்றமான வாக்குச்சாவடிகள் அனைத்தும் வெப்-ஸ்ட்ரீம் மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.  சென்னையில் 3 பேர் உள்பட 38 மாவட்டங்களில் 43 ஐஏஎஸ் அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார்.

இன்று நடைபெற்று வரும் தேர்தலில் காலை 9 மணி வரை ஓவர்ஆல் 8.21 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி உள்ளது என்று கூறியவர், மாநகராட்சிகள் 5.78 சதவிகிதமும், நகராட்சிகளில் 10.32சதவிகிதம் அளவிலும், பேரூராட்சிகளில் 11.74 சதவிகிதம் அளவிலும் வாக்குகள் பதிவாகி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.