சென்னை: கோவையில் தேர்தல் முறைகேடு, வெளி மாவட்டத்தினர் குவிப்பு கண்டித்து, அதிமுக போராட்டம் நடத்தியதன் எதிரொலியாக கோவையை கண்காணிக்க சிறப்பு அதிகாரியை மாநில தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, கோவை மாநகராட்சிக்கு சிறப்பு தேர்தல் பார்வையாளராக ஐஏஎஸ் அதிகாரி எஸ் நாகராஜனை நியமித்து, மாநில தேர்தல் ஆணையம் நேற்று மாலை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில், கரூர், திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த திமுகவினர் குவிந்துள்ளதாகவும், வாக்காளர்களுக்கு ஹாட்பாக்ஸ் உள்பட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பான வீடியோ, போட்டோகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால், தேர்தல் முறைகேடுகள்மீது காவல்துறையினரும், தேர்தல் அலுவலர்களும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும்,  கோவை மாவட்டத்தை கலவர பூமியாக்க திமுக திட்டமிட்டு உள்ளதாகவும், இந்த தேர்தலை நேர்மையாக நடத்த துணைஇராணுவத்தை கொண்டு வரவேண்டும் என்றும், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையில், அதிமுக எம்எல்ஏக்கள், நேற்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர். இது மாநிலம்  முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர்,  கோவை மாநகராட்சிக்கு சிறப்பு தேர்தல் பார்வையாளரை நியமித்து இருப்பதாக அறவித்தார்.  அதன்படி, நில நிர்வாக ஆணையர் நாகராஜன், தற்போது கோவை மாவட்ட சிறப்பு தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மாவட்டத்தில் அனைத்துவிதமான முறைகேடுகளும் நடைபெற்று முடிந்து வாக்குப்பதிவு தொடங்கிய நிலையல், நேற்று இரவு சிறப்பு அதிகாரியை மாநில தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது, கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போன்றது.

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டம்….

 

கோவை மாவட்டத்தில்  ஒரு மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகள் என கோவை மாவட்டத்தில் 41 உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது. மாநகராட்சியில் 100 வார்டுகள், நகராட்சிகளில் 198 வார்டுகள், பேரூராட்சிகளில் 504 வார்டுகள் என 802 இடங்களுக்கு கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். மாநகராட்சியில் 778, நகராட்சி, பேரூராட்சிகளில் 2588 என மொத்தம் 3,366 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மாவட்டம் முழுவதும் மொத்தம் 24 லட்சத்து 74 ஆயிரத்து 314 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

வாக்குப்பதிவுக்காக மாநகராட்சி யில் 1,290 வாக்குச்சாவடிகள், நகராட்சிகளில் 390 வாக்குச்சாவடி கள், பேரூராட்சிகளில் 632 வாக்குச்சாவடிகள் என 2,312 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில்,மாவட்ட நிர்வாகத்தின் ஆய்வின்படி, 436 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. இங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸார்கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கோவை மாவட்டத்துக்கான தேர்தல் பார்வையாளர் எம்.கோவிந்தராவ் நேற்று பதற்றமான வாக்குச்சாவடிகளை பார்வையிட்டு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கினார். தெற்கு உக்கடம் ஹோலி ஃபேமிலி கான்வென்ட் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் ஆய்வு செய்தார்.

மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையையும் பார்வையிட்டார். மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, துணை ஆணையர் மோ.ஷர்மிளா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக, மாநகரில் காவல் ஆணையர் பிரதீப் குமார் தலைமையில் 2,500 போலீஸாரும், மாவட்டப் பகுதியில் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் தலைமையில் 2 ஆயிரம் போலீஸாரும், ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.