அகமதாபாத்
கடந்த 2008ஆம் வருடம் அகமதாபாத் குண்டு வெடிப்பு வழக்கில் 38 பேருக்கு மரண தண்டனை மற்றும் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் கடந்த 2008-ம் ஆண்டு, ஜூலை 26-ம் தேதி 21 குண்டுகள் வெடித்தன. இந்த குண்டு வெடிப்பில் 56 பேர் கொல்லப்பட்டனர், தவிர 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சுமார் 70 நிமிடங்களில் எல்லாம் நடந்து முடிந்தது. இக்கொடூரத் தாக்குதலுக்கு ஹர்கத் உல் ஜிஹாத் அல் இஸ்லாமி என்ற அமைப்பு பொறுப்பேற்றது.
கடந்த 13 ஆண்டுகளாக நடந்துவந்த இந்த வழக்கில், கடந்த 8-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில் 49 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு 28 பேர் விடுவிக்கப்பட்டனர். இன்று குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டவர்களுக்குத் தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டன.
குற்றம் சாட்டப்பட்ட 49 பேரில் 38 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மீதம் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இத்தனை பேருக்கு ஒரே வழக்கில் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படுவதை ஒட்டி அகமதாபாத் நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
தவிர குண்டுவெடிப்பில், உயிரிழந்தவர்கள் ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் தலா ரூ.1 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும், படுகாயம் அடைந்த நபர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் நிவாரண தொகையாக வழங்க வேண்டும் என்று நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.