கோவை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, கோவையில் மெழுகுவர்த்தி, சிலுவையுடன் கூடிய ஜெப மாலைகளை வழங்கி பாஜகவினர் வாக்குகள் சேகரித்து வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படம் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் 2016-ல் இருந்து ஒத்தி வைக்கப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஆறு ஆண்டுகள் கழித்து தற்போது தான் நடைபெறுகிறது. சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகளைச் சேர்ந்த 12,838 வார்டுகளுக்கு  பிப்ரவரி மாதம்  19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் சுமார் 2 கோடியே 79 லட்சத்து 56 ஆயிரம் பேர்  வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். வாக்குப்பதிவை தொடர்ந்து,  வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ந்தேதி நடைபெற உள்ளது. பின்னர், தேர்ந்தெடுக்கபட்ட உறுப்பினர்களின் பதவியேற்பும், மேயர் பதவிக்கான தேர்தலும் மார்ச் 2 ஆம் தேதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம்  அறிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு அடுத்ததாக கோவை இரண்டாவது பெரிய மாநகராட்சியாக உள்ளது. மொத்தம் 100 வார்டுகள் அடங்கிய கோவை மாநகராட்சியில் 15,38,411 வாக்காளர்கள் உள்ளனர். கோவை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, ஏழு நகராட்சி, 33 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுகின்றன.

மாநகராட்சியை கைப்பற்ற  திமுக கூட்டணி ஒருபுறமும், அதிமுக, பாஜக, மநீம, தேமுதிக, அமமுக என அனைத்து கட்சிகளும் களமிறங்கி உள்ளன. சட்டமன்ற தேர்தலில் கொங்கு மண்டலத்தில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்ட திமுக, அங்கு சிரமேற்கொண்டு பணியாற்றி வருகிறது. அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில், திமுகவினர் களமிறக்கப்பட்டு உள்ளனர். இலவசங்களும் வாரி வழங்கப்பட்டு வருகிறது.

இந் நிலையில், கோவை கருமத்தம்படி நகராட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பெரியசாமி, அங்குள்ள கிறிஸ்தவ வாக்காளர்களின் வாக்குகளை பெறும் நோக்கில், மெழுகுவர்த்தி, சிலுவையுடன் கூடிய மாலை வழங்கி வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகைப்படம் வெளியாகி உள்ளது.

‘ஹாட் பாக்ஸ்’ விநியோகம்; தென்னந்தோப்பு குடோன் – போராட்டம் நடத்திய அதிமுகவினர் கைது! இது கோவை அவலம்… புகைப்படங்கள்