டெல்லி: மக்களின் பொருளாதாரம் தடைபடாமல் இருக்க கூடுதல் தளர்வுகள் வழங்குவது குறித்து ஆராய மாநிலஅரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கடிதம் எழுதி உள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இதனால், கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள், நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலும் 90சதவிகிதம் அளவிலான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில், கூடுதல் தளர்வுகளை அறிவிக்க மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியுள்ளார். அவரது கடிதத்தில், நாடு முழுவதும் ஜனவரி 21ஆம் தேதி முதல் தொடர்ந்து கரோனா நோய்த் தொற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த வாரம் சராசரி பாதிப்பு 50,476 ஆக பதிவாகியுள்ளன. பிப்ரவரி 15ஆம் தேதி தினசரி விகிதம் 3.63 சதவீதமாக குறைந்துள்ளது.
இதனால், மாநிலங்களில் உள்ள நேர்மறை வழக்குகளை கருத்தில் கொண்டு கரோனா கொட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகளை அளித்தால் பயனுள்ளதாக இருக்கும். அதுகுறித்து ஆய்வு செய்து, மேலும் தளர்வுகளை அறிவிக்கலாம்,
மேலும், மக்களின் பொருளாதாரம் தடைபடாமல் இருக்க தங்கள் மாநில எல்லைகளில் உள்ள விமான நிலையங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடைகளை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
அத்துடன், கொரோனா உறுதியாகும் விகிதத்தை மாநில அரசுகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், கொரோனா சோதனை, கண்காணிப்பு, சிகிச்சை, தடுப்பூசி மற்றும் விதிமுறைகளை கடைபிடித்தல் ஆகிய ஐந்து அடுக்கு உத்திகளை பின்பற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.