சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, வரும், 18, 19-ம் தேதிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல பள்ளி, கல்லூரிகள் வாக்குச்சாவடி மையங்களாக இருப்பதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகளைச் சேர்ந்த 12,838 வார்டுகளுக்கு பிப்ரவரி மாதம் 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் சுமார் 2 கோடியே 79 லட்சத்து 56 ஆயிரம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். வாக்குப்பதிவை தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ந்தேதி நடைபெற உள்ளது. பின்னர், தேர்ந்தெடுக்கபட்ட உறுப்பினர்களின் பதவியேற்பும், மேயர் பதவிக்கான தேர்தலும் மார்ச் 2 ஆம் தேதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வாக்குப்பதிவு வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளதாலும், பல பள்ளிகள், கல்லூரிகள் வாக்குப்பதிவு மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதால், வரும் 19ந்தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 50% மேல் தேர்தல் பணியில் ஆசிரியர்கள் இருப்பின் அப்பள்ளிகளுக்கும் 18-02-2022 அன்றும் விடுமுறை அளிக்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த பெரும்பாலான ஆசிரியர்கள், தேர்தல் பணிக்காக 18ந்தேதியே செல்ல இருப்பதாலும் பல பள்ளிகள் தேர்தல் வாக்குச்சாவடிகளாக இருப்பதாலும், 18ந்தேதி மற்றும் 19ந்தேதிகள் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவது உறுதியாகி உள்ளது.