புதுக்கோட்டை
காளைகளை ஜல்லிக்கட்டில் அடக்குவது போல் சட்டசபையை யாராலும் முடக்க முடியாது என முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் கூறி உள்ளார்.
தமிழகத்தில் தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்து வருகிறது. அனைத்துக் கட்சிகளும் பிரச்சாரக் கூட்டம் நடத்தி வருகின்றன. மாநிலத்தில் எதிர்க்கட்சிகளான அதிமுக மற்றும் பாஜகவினர் தொடர்ந்த் தமிழக சட்டசபை முடக்கப்படும் என மிரட்டி வருகின்றனர். இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ப சிதம்பரம், “பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியின் ஜெராக்ஸ் தான் ஆம்ஆத்மி என்று கூறி இருப்பது வேடிக்கை யாக உள்ளது. உண்மையில் பஞ்சாபில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பே பாஜகவுக்கு அம்மாநில மக்கள் பிரியாவிடை கொடுத்துவிட்டார்கள்.
தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை ஒரு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். அண்ணாமலை முதலில் அரசியல் சாசன சட்டத்தைப் படிக்க வேண்டும். காளைகளை ஜல்லிக்கட்டில் அடக்குவதுபோல சட்டப்பேரவையை யாராலும் முடக்க முடியாது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.
பாஜகவின் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதெல்லாம் அபத்த மான வார்த்தைகள் ஆகும். வரும் 2026-ல் தான் தமிழகத்தில் அடுத்த சட்டப் பேரவை தேர்தல் நடைபெறும். பாஜக கூறுவதைப் போல் அதற்கிடையே தேர்தல் நடக்க வாய்ப்பு இல்லை” என தெரிவித்துள்ளார்.