சென்னை
திருப்புதல் தேர்வு மதிப்பெண்கள் பொதுத்தேர்வுக்குக் கணக்கில் கொள்ளப்படாது எனத் தமிழக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
நேற்றுடன் தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்த முதல் திருப்புதல் தேர்வு முடிவடைந்துள்ளது. இந்த தேர்வில் பல்வேறு பாடங்களுக்கான கேள்வித்தாள்கள் முன்கூட்டியே சமூக ஊடகங்களில் வெளியானது. இதையொட்டி மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி பணி இடை நீக்கம் செய்யப்பட்டார். இரு தனியார்ப் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இது குறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள், “மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார்ப்படுத்த 2 திருப்புதல் தேர்வுகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த திருப்புதல் தேர்வுகள் பொதுத் தேர்வு போன்றே இருக்குமே தவிர இந்த திருப்புதல் தேர்வுகளில் மதிப்பெண்கள் பொதுத் தேர்வுக்கானது இல்லை. இந்த மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது
ஆகவே மாணவர்களும் பெற்றோர்களுக்கும் எவ்வித அச்சமும் வேண்டாம். திருப்புதல் தேர்வு ஒரு அடிப்படை பயிற்சிக்காக நடத்தப்படுகிறது. விரைவில் 2 ஆம் திருப்புதல் தேர்வு நடைபெற உள்ளது. தவிர 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குக் கட்டாயம் பொதுத்தேர்வு நடைபெறும்” என அறிவித்துள்ளனர்.