சீக்கியர்கள் அதிகம் வாழும் பஞ்சாப் மாநிலத்தில் மட்டுமன்றி பல்வேறு மாநிலங்களில் உள்ளவர்களும் வணங்கும் மகான் ரவிதாஸ் அவர்களின் ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது.

15 ம் நூற்றாண்டில் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசிக்கு அருகில் பிறந்த குரு ரவிதாஸரின் சமூக சீர்திருத்த கொள்கைகள் மற்றும் பாடல்களால் ஈர்க்கப்பட்ட பலர் அவரது பிறந்த தினமான மாசி மக பௌர்ணமி அன்று வாரணாசிக்குச் சென்று புனித நீராடுவது வழக்கம்.

இந்த ஆண்டு குரு ரவிதாஸ் ஜெயந்தி தினத்தின் போது பிப்ரவரி 14 ம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பஞ்சாப் மாநில முதல்வரின் கோரிக்கையை ஏற்று அதனை பிப்ரவரி 20 ம் தேதிக்கு மாற்றியது தேர்தல் ஆணையம்.

இந்நிலையில், இன்று டெல்லி கரோல் பாக்கில் உள்ள குரு ரவிதாஸ் ஆலயத்திற்குச் சென்ற பிரதமர் மோடி அங்கு நடைபெற்ற பஜனையில் பங்கேற்றதுடன் மஜிரா எனும் தாள வாத்தியத்தையும் இசைத்தார் இந்த நிகழ்வு குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும், குரு ரவிதாஸ் ஜெயந்தியை முன்னிட்டு டெல்லியில் இன்று அரசு விடுமுறை அளித்து அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு உத்தரவிட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் வசிக்கும் சீக்கியர்களில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக குரு ரவிதாஸரை வணங்குபவர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.