சென்னை: பட்டியலினத்தவர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தாக, பதிவு செய்யப்பட்ட அவதூறு வழக்கு தொடர்பாக வரும் 21-ம் தேதி நடைபெறும் விசாரணைக்கு நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு (2021) ஆகஸ்ட் மாதம், பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாக நடிகை மீரா மிதுனுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருந்த வீடியோவில், பட்டியலினப் பிரிவைச் சேர்ந்த இயக்குநர்கள், நடிகர்களை தவறாக விமர்சித்து இருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்த புகாரின் அடிப்படையில் 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், மீரா மிதுனை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர். கேரளாவில் பதுங்கி இருந்த அவரையும், அவரது ஆண் நண்பரான ஷாம் அபிஷேக்கையும் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 14-ம் தேதி கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். பின்னர், இருவரும் ஜாமீனில் விடுதலையான நிலையில், அவர்களுக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மீரா மிதுனுக்கு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நடிகை மீராமிதுன், தனது நண்பருடன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகி, குற்றப் பத்திரிகை நகலை பெற்றுக் கொண்டார். இதையடுத்து, அடுத்தக்கட்ட விசாரணைக்கு வரும் 21ந்தேதி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.