சென்னை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் விதிகளை மீறியதாக இதுவரை ரூ.9.28 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகளைச் சேர்ந்த  12,838 வார்டுகளுக்னா பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க பிப்ரவரி மாதம்  19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  அதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்ந்தெடுக்கபட்ட உறுப்பினர்களின் பதவியேற்பும், மேயர் பதவிக்கான தேர்தலும் மார்ச் 2 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.  இதனை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சார பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் இலவச அன்பளிப்புகள் மற்றும் முறைகேடுகளை தடுக்க தேர்தல் ஆணையம் பறக்கும் படைகளை அமைத்து கண்காணித்து வருகின்றன.  பல இடங்களில்  தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனைகளின் போது முறையான ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் பணம், பொருட்கள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர். ஆவணங்களை சமர்ப்பித்த பிறகு சம்பந்தப்பட்ட நபர்களிடம் அவை ஒப்படைக்கப்படுகின்றன.

அதன்படி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த ஜனவரி  மாதம் 28 ஆம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி வரை, 6 கோடியே 89 கோடி ரூபாய் பணம், ஒரு கோடியே 37 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக, இதுவரை 9 கோடியே 28 லட்சம் மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.