லக்னோ: பாஜகவுக்கு வாக்களிக்காவிட்டால் ஜேசிபி மூலம் வீடுகளை இடிப்பேன் என உ.பி. மாநில பாஜக எம்எல்ஏ பொதுமக்களை மிரட்டும் வீடியோ வைரலாகி வருகிறது.
403 தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேச சட்டமன்ற ஆட்சி காலம் 2022ம் ஆண்டு மே மாதம் 14ந்தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. உத்தரபிரதேசத்தில் பிப்ரவரி 10, 14, 20, 23, 27 மற்றும் மார்ச் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. அங்கு அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்துள்ளன. ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சி தீவிரமாக பணியாற்றி வருகிறது. அதே வேளையில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள யோகி தலைமையிலான பாஜகவும் போராடி வருகிறது. இதற்கிடையில், சமாஜ்வாதி கட்சி, யோகி அமைச்சரவையில் இடம்பெற்ற அமைச்சர்கள், எம்எல்ஏக்களை தனது கட்சிக்கு அழைத்து வந்து, யோகிக்கு பயத்தை காட்டி உள்ளது. மேலும் பகுஜன் சமாஜ் கட்சியும் தனித்து போட்டியிடுவதால் பரபரப்பு நிலவி வருகிறது.
உ.பி. மாநிலத்தில் ஏற்கனவே பிப்ரவரி 10 மற்றும் 14ந்தேதிகளில் 2 கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்துள்ளது. இன்னும் 5 கட்ட வாக்கு பதிவு நடைபெற உள்ளதால், தேர்தல் களம் தகதகவென தகித்துக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், உத்தரபிரதேச மாநில பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், வாக்காளர்கள் யோகிக்கு வாக்களிக்காமல் இருந்தால் ஜேசிபியைக் கொண்டு உங்கள் வீட்டை இடிப்பேன் என்று மிரட்டி உள்ளார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.