சென்னை: ஹிஜாப் பிரச்சினை தமிழகத்திற்கு வந்து விடக்கூடாது; இது முற்போக்கு சக்திகள் கவனமாக இருக்க வேண்டிய காலம்” என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கர்நாடகா மாநில கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு பள்ளி, கல்லூரி நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. இது சர்ச்சையாக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து இஸ்லாமிய மாணவிகள் போராட்டம் நடத்தினர். இதை கண்டித்து, இந்து மாணாக்கர்களும் போராட்டம் நடத்தினர். இதனால், அனைத்து பள்ளி, கல்லூரிகளும் விடுமுறைவிடப்பட்டு உள்ளது.
பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிவதற்கு அனுமதி கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அதை விசாரித்த நீதிமன்றம், மாணாக்கர்கள் அமைதி காக்க அறிவுறுத்திய நிலையில், இன்று பிற்பகல் முழுமையாக விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டிவிட் பதிவிட்டுள்ளார். அதில், கர்நாடகாவில் நடப்பது கலக்கத்தைத் தூண்டுகிறது. கள்ளமில்லா மாணவர்கள் மத்தியில் மதவாத விஷச் சுவர் எழுப்பப்படுகிறது. ஒற்றைச் சுவர் தாண்டியிருக்கும் பக்கத்து மாநிலத்தில் நடப்பது தமிழ்நாட்டுக்கும் வந்துவிடக் கூடாது. முற்போக்கு சக்திகள் மேலும் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது என எச்சரித்துள்ளார்.