சென்னை:  சித்தூர் மாவட்ட தமிழ் குழந்தைகளுக்கு இலவச தமிழ் புத்தகம் வழங்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து நடிகை ரோஜா கடிதம் எழுதி உள்ளார். “காலை 11 மணியளவில் கோரிக்கை விடுத்தேன்.. திரும்பி நகரி வந்து சேர்வதற்குள்..” முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என்று மு.க.ஸ்டாலினை  நகரி தொகுதி எம்.எல்.ஏ. ரோஜா பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், “எங்கள் தொகுதியில் மற்றும் சித்தூர் மாவட்டத்தில் வசிக்கிற தமிழர்களின் குழந்தைகளுக்கு தமிழ் மொழி பாடத்திட்டத் திற்கான 10ஆயிரம் புத்தகங்கள் இலவசமாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம்.தங்களை நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் சந்தித்து கோரிக்கை விடுத்து, திரும்பி நாங்கள் நகரி வந்து சேர்வதற்குள் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான தமிழ்ப் பாடநூல்கள் வகுப்புக்கு தலா ஆயிரம் பிரதிகள் வீதம் சென்னை வட்டார அலுவலக மற்றும் அடையாறு கிடங்கில் இருந்து இலவசமாக பெற்றுக்கொள்ளும்படி உத்தரவு பிறப்பித்துள்ளீர்கள்.

மின்னல் வேகம் என்பார்கள், ஆனால் அதை விட வேகமாக தங்கள் உத்தரவு எங்களுக்கு வந்து அடைந்ததைக் கண்டு நாங்கள் வியந்து போனோம்.மின்னல் வேகம் என்பதை, இனி ஸ்டாலின் வேகம் என்றே குறிப்பிடலாம் என்று சந்தோஷத்தில் பாராட்டத் தோன்றுகிறது.

எங்கள் கோரிக்கைகளை ஏற்று சித்துார் மாவட்டத்தில் வாழ்கின்ற தமிழ் குழந்தைகளுக்கு இலவசமாக தமிழ் மொழி புத்தகத்தை வழங்கிய தங்களுக்கு ஆந்திரா வாழ் தமிழர்கள் சார்பில் இதயம் கனிந்த நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்”

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.