சென்னை:  முதலமைச்சர் கணினி தமிழ் விருதுக்கு 28ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

முதலமைச்சர் கணினித் தமிழ் விருது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்படும் விருது. இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, ரூ.1 லட்சம் ரூபாய், தங்கப் பதக்கம், தகுதியுரை, பொன்னாடை ஆகியவை விருதாக வழங்கப்படுகின்றன. இதற்கென ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு 1.85 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்கிறது.

கணினித்தமிழ் வளர்ச்சிக்காகச் சிறந்த தமிழ் மென்பொருள்களை உருவாக்குபவர்களுக்கு இவ்விருது கடந்த 2013ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.  அதன்படி 2021ம் ஆண்டுக்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதற்கான காலம் முடிவடைந்த நிலையில், தற்போது மேலும் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  கணினி தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ‘முதலமைச்சர் கணினித்தமிழ் விருது’ என்ற பெயரில் விருது வழங்கப்பட்டு வருகிறது. விருது பெறுபவருக்கு விருது தொகையாக ரூ.2 லட்சம், ஒரு பவுன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படும்.

அந்த வகையில், 2021ம் ஆண்டுக்குரிய முதலமைச்சர் கணினித்தமிழ் விருதுக்கு தனிநபர் மற்றும் நிறுவனத்திடம் இருந்து, தமிழ் வளர்ச்சிக்கான மென்பொருள்கள் வரவேற்கப்பட்டு, விருதுக்கான விண்ணப்பம் வந்த சேரவேண்டிய இறுதி நாள் 31.12.2021 என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது விருதுக்கு விண்ணப்பிக்கும் காலம் வருகிற 28-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

போட்டிக்கு அனுப்பப்பட உள்ள மென்பொருள்கள் 2018, 2019, 2020ம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும். விண்ணப்பங்கள், தமிழ் வளர்ச்சி இயக்குனர், தமிழ் வளர்ச்சி வளாகம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை – 600 008 என்ற முகவரிக்கு 28ந்தேதிக்குள் வந்து சேர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044–28190412, 28190413 என்ற தொலைபேசி எண்கள் மற்றும் tvt.budget@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம். விருதுக்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளை www.tamilvalarchithurai.com என்ற இணையதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இவ்வாறு  கூறப்பட்டுள்ளது.