சென்னை
இன்று நீட் விலக்கு மசோதா குறித்த சிறப்புச் சட்டப்பேரவை கூட்டத்தொடர் சென்னை ஜார்ஜ் கோட்டையில் நடைபெறுகிறது.
சென்ற வருடம் செப்டம்பர் மாதம் மருத்துவ படிப்புக்கான நீட் விலக்கு மசோதா சட்ட முன் வடிவைச் சட்டப்பேரவையில் இயற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநரிடம் அனுப்பப்பட்டது. 142 நாட்களாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படாமல் இருந்த நீட் விலக்கு மசோதாவை அதன் பிறகு தமிழ் நாடு சட்டப்பேரவைத் தலைவருக்கு ஆளுநர் ஆர். என். ரவி திருப்பி அனுப்பினார்.
இந்த நீட் விலக்கு மசோதாவைத் திருப்பி அனுப்பிய விவகாரம் தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தினார். ஆனால் அதிமுக, பாஜக மற்றும் புரட்சி பாரதம் ஆகிய கட்சிகள் இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்தன.
இந்தக் கூட்டத்தில் மறுபடியும் நீட் விலக்கு மசோதா இயற்றி ஆளுநருக்கு அனுப்பத் தமிழ அரசு முடிவு செய்து அதற்கான சிறப்புச் சட்டப் பேரவை கூட்டம் இன்று கூட்டப்படுகிறது. இதுவரை கொரோனா நோய்த்தொற்று காரணமாகக் கலைவானர் அரங்கில் நடத்தப்பட்டு வந்த கூட்டத் தொடர் இன்று மறுபடியும் ஜார்ஜ் கோட்டையில் கூட்டப்படுகிறது.
ஏற்கனவே கலைவானர் அரங்கில் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு டேப் வழங்கப்பட்டு அவர்களின் இருக்கையில் கணினி பொருத்தப்பட்டிருந்தது. ஜார்ஜ் கோட்டையிலும் உறுப்பினர்கள் அமரும் இருக்கையில் கணினி பொருத்தப்பட்டுள்ளது. இதுவரை 10 ஆண்டுகளில் நான்கு முறை சிறப்புச் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நடைபெற்றுள்ளது.