சென்னை: மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தமிழகஅரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக, மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும் வாய்ப்பு உருவாகி உள்ளது.
நாடு முழுவதும் ஏழை மக்களின் வாழ்வதாரத்துக்கு 100 நாள் வேலை திட்டம் கைகொடுப்பதுபோல, கடந்த திமுக ஆட்சியில், மக்கள் நலப்பணியாளர்களுக்கு வேலை வழங்கப்பட்டது. 1989ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி வேலையில்லாதவர்களுக்கு அரசுப் பணி வழங்கும் நோக்கில். கிராம பஞ்சாயத்துகளில் தலா 2 ஊழியர்கள் என 25,234 பேரை மக்கள் நலப் பணியாளர்களாக நியமித்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த பணிகள் திமுகவினருக்கு மட்டுமே வழங்கப்பட்டதாக கூறப்பட்டது.
அதனால், அடுத்து 1991ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு மக்கள் நலப்பணியாளர்கள் பணியை ரத்து செய்தது. இதுதொடர்பான வழக்குகள் நடைபெற்று வந்தது. ஆனால், அடுத்த வந்த அரசுகள் அவர்களின் வாழ்க்கையில் விளையாடி வந்தன. திமுக ஆட்சியின்போது, அவர்களுக்கு பணி வழங்கப்படுவதும், அதிமுக ஆட்சியில் பணி நிராகரிக்கப்படுவதுமாக தொடர்ந்து. 2009ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது, ம தொகுப்பூதியம் பெற்று வந்த மக்கள் நலப் பணியாளர்களை, சிறப்பு கால வரைமுறை ஊதியத்தின் கீழ் கொண்டு வந்தனர். ஆனால் 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி வந்ததும், கிராம பஞ்சாயத்துக்களில் போதிய ஊழியர்கள் உள்ளனர் எனக்கூறி மக்கள் நலப் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பியது.
இதனை எதிர்த்து தமிழ்நாடு மக்கள் நலப் பணியாளர் முன்னேற்ற சங்கம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து அரசின் உத்தரவை தனி நீதிபதி ரத்துசெய்ய, அரசு உயர்நீதிமன்ற அமர்வில், மேல் முறையீடு செய்தது. அங்கும், மக்கள் நலப் பணியாளர்களைப் பணிநீக்கம் செய்தது செல்லாது. அவர்களுக்கு அக்டோபருக்குள் மாற்றுப் பணி வழங்க உத்தரவிட்டது. ஆனால், அதிமுக அரசு, உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்ற உத்தரவிற்கு இடைக்கால தடைவிதித்தது. இந்த வழக்கு பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.
இதற்கிடையில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக, மக்களின் வாழ்வதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டி, தங்களுக்கு நிதி வழங்க வேண்டும் என பணியாளர்கள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணையின்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்தி வைக்க கோரிக்கை விடுத்ததுடன், “மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது குறித்து ஊரக வளர்ச்சித்துறை ஆய்வு செய்து முன்மொழிவை அனுப்பி உள்ளது. அந்த முன்மொழிவை பரிசீலனை செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கும். அந்த பரிசீலனை செய்யப்பட் அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இதை ஏற்று வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. தமிழகஅரசின் இந்த நடவடிக்கை காரணமாக, மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும் வாய்ப்பு உருவாகி உள்ளது.