மதுரை: காவல் துறையின் வன்முறை வெறியாட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. 1982ஆம் ஆண்டு காவல் துறையினரால் துன்புறுத்தப்பட்ட ஓய்வுபெற்ற ராணுவ வீரர் தொடர்ந்த வழக்கில், அவரது குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
இதுரை அருகே உள்ள வாடிப்பட்டியைச் சேர்ந்தஓய்வுபெற்ற ராணுவ வீரர் நல்லகாமன், அவரது மனைவி ஆசிரியை சீனியம்மாள் ஆகியோரை வீடு ஒத்தி தொடர்பான வழக்கில், 1982ஆம் ஆண்டு காவல் துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, காவல் உதவி ஆய்வாளர் பிரேம்குமார் உள்பட காவலர்கள், தம்பதியினரின் தம்பதியின் ஆடைகளை அவிழ்த்து, கடுமையாக கொடுமைபடுத்தினர். இது தொடர்பாக நல்லகாமன் கொடுத்த புகாரின் பேரில், காவல் துறையினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஆனால், இதை எதிர்த்து காவல்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், நல்லகாமன் கொடுமைப்படுத்தப் பட்டதற்கு ஆதாரம் இல்லை என்று கூறி வழக்கை ரத்து செய்தது. ஆனால், நல்லகாமன் மீண்டும் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். தன் மீதான தாக்குதலுக்கு காவல்துறையினர் 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த வழக்கு பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையில், சர்ச்சைக்குரிய காவல் ஆய்வாளர் ஓய்வுபெற்று மரணத்தை தழுவி விட்டார். அதுபோல வழக்கு தொடுத்த நல்லகாமனும் இறந்து விட்டார். இதையடுத்து அவரது மகன் வழக்கைத் தொடர்ந்து நடத்தி வந்தார்,
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், “உச்ச நீதிமன்றம் வழக்கை ரத்துசெய்ததால், இழப்பீடு வழங்க முடியாது என்ற வாதம் ஏற்புடையது என்று, காவல்துறையினரின் வாதத்தை ஏற்க மறுத்ததுடன், சந்தேகத்தின் பலனை கருத்தில்கொண்டே உச்ச நீதிமன்றம் விடுவித்துள்ளது. இந்த வழக்கில், காவல் துறையினரின் வன்முறையும், மனித உரிமை மீறலும் நடந்துள்ளது அப்பட்டமாக தெரிகிறது. இதுபோன்ற துறையினரின் வன்முறை வெறியாட்டத்தை ஒருபோதும் அனுமதிக்கவும் முடியாது, ஊக்கப்படுத்தவும் கூடாது என்று எச்சரித்ததுடன், நல்லகாமன் இப்போது உயிருடன் இல்லாததால், அவரது கோரிக்கையை ஏற்று அவரது குடும்பத்தினருக்கு அரசின் சார்பில் இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்” என உத்தரவிட்டார்.