சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 53வது நினைவுநாளை முன்னிட்டு, மெரினாவில் உள்ள அண்ணா சமாதியில் முதலவர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
பேரறிஞர் அண்ணா அவர்களின் 53ஆவது நினைவு நாளையொட்டி சென்னை, காமராஜர் சாலை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டில், அண்ணா என்று தமிழ்நாடே அன்புடன் அழைக்கும் இம்மண்ணின் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்கள் உரத்து முழங்கிய கொள்கைகள் இன்று இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் எதிரொலிக்கின்றன; மாநில சுயாட்சிக்கான குரல் வலுப்பெறுகிறது. பேரறிஞர் காட்டிய வழியில் எந்நாளும் பயணிப்போம் என்று தெரிவித்து உள்ளார்.
முன்னதாக திமுக சார்பில், அண்ணா குறித்து வெளியிடப்பட்டுள்ள பதிவில், “பேரறிஞர் அண்ணா, தன் ஆட்சியில் தொடங்கி வைத்தவற்றை மாறாமல் தொடர்ந்திடும் பணியினை உங்களின் ஒருவனான என்னுடைய தலைமையில் அமைந்துள்ள நமது அரசு ஈடுபாட்டுடன் மேற்கொண்டு வருகிறது” என புகழாரம் சூட்டியுள்ளார்.