சென்னை: மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பொறுப்புயர்வு பெற்றுள்ள பொறுப்பு நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரியை நேரில் சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை, மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்தது. இதையடுத்து, அலகாபாத் உயர்நீதி மன்ற நீதிபதியாக பதவி வகித்து வந்த முனீஸ்வர் நாத் பண்டாரியை, சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் 2021ம் ஆண்டு நவம்பர் 22ந்தேதி சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். இவரை, நிரந்தர தலைமை நீதிபதியாக நியமிக்க, உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்தது. இதையடுத்து, அவர் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து, ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்தார். அதைத்தொடர்ந்து, அவர் தலைமைநீதிபதியாக கடந்த இரு நாட்களுக்கு முன்பு பதவி ஏற்றுக்கொண்டார்.
இந்த நிலையில், தலைமை நீதிபதியாகப் பொறுப்புயர்வு பெற்றுள்ள மாண்பமை நீதியரசர் முனீஸ்வர் நாத் பண்டாரியின் இல்லத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.
முன்னதாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், வரலாற்று சிறப்புமிக்க, சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பு உயர்வு பெற்று உள்ள நீதிபதி முனிஸ்வர் நாத் பண்டாரிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். நீதி நிர்வாகத்தில், தங்களது அனைத்து முயற்சிகளுக்கும் துணை நிற்க அரசு உறுதி பூண்டுள்ளது என்று கூறியிருந்தார்.