சென்னை
மகளிர் குழுவினரின் பணத்தில் மோசடி செய்ததாக ஊத்தங்கரை இந்தியன் வங்கி மேலாளரை எதிர்த்து மகளிர் சாலை மறியல் செய்துள்ளனர்.
ஊத்தங்கரை இந்தியன் வங்கியில் துடுப்பு என்ற மகளிர் குழுவைத் சேர்ந்த ஆறு பெண்கள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 50 ஆயிரம் வீதம் கடன் வாங்கி இந்த கடனை மாத தவணை முறையில் கட்டி வந்தனர். இந்த குழுவில் ஒருவர் கடனை கட்ட இயலாத நிலையில் இருந்துள்ளார்.
இதனால் வங்கி மேலாளர் அந்த கடனுக்காக மற்றவர்களின் வங்கிக் கணக்கில் இருந்து அவர்களின் அனுமதி இல்லாமல் பணம் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையொட்டி வங்கி மேலாளரிடம் பெண்கள் முறையிட்டும் பணம் திரும்ப வராத நிலையில், காவல் நிலையத்தில் புகார் அளித்து முறையிட்டனர்.
காவல்துறையினர் மூலம் தங்களுக்குச் சரியான தீர்வு கிடைக்கவில்லை எனக் கூறி இன்று சுமார் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரம் நடந்த இந்த திடீர் சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த தகவல் அறிந்து உடனடியாக அங்கு விரைந்து வந்த ஊத்தங்கரை காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர். இவ்வாறு இந்தியன் வங்கி மேலாளரைக் கண்டித்து பெண்கள் சாலை மறியல் செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.