சென்னை
தமிழகத்துக்குச் சிறுவாணி நீர் வழங்கலை அதிகரிக்கக் கோரி கேரள முதல்வருக்குத் தமிழக முதல்வர் கடிதம் எழுதி உள்ளார்.
தமிழகத்தில் கோவை மாநகராட்சிக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக சிறுவாணி நீர் விளக்கி வருகிறது. கோவை மாநகராட்சிக்கு மொத்த நீர் தேவையான 265 மில்லியன் லிட்டரில் 101.4 மில்லியன் லிட்டர் மட்டுமே சிறுவாணி அணையில் இருந்து கிடைத்து வருகிறது. எனவே கோவை மாநகராட்சிக்கு நீர் அதிகம் தேவை உள்ளது.
இதையொட்டி கேரள முதல்வர் பினராயி விஜயனுக்குத் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் எழுதி உள்ள கடிதத்தில், “சிறுவாணி அணையில் இருந்து ஜூலை 1 முதல் ஜூன் வரையிலான ஆண்டுதோறும் 1.30 டி எம் சி குடிநீர் வழங்க கேரளா மற்றும் தமிழகத்துக்கு இடையே ஒப்பந்தம் உள்ளது. ஆனால் கடந்த 6 ஆண்டுகளில் கேரள அரசு 0.484 டிஎம்சி முதல் 1.128 டிஎம்சி வரையிலான தண்ணீர் மட்டுமே வழங்கி உள்ளது.
சிறுவாணி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த மூன்று ஆண்டுகளாக போதுமான அளவுக்கு மழை பெய்துள்ளது. ஆயினும் சிறுவாணி அணையில் முழு கொள்ளளவுக்கு நீர் சேமிக்கப்படுவதில்லை. இதனால் பயனாளிகளுக்கு போதுமான அளவு நீர் கிடைக்காமல் குறைந்த அளவிலான நீர் மட்டுமே வழங்கப்படுகிறது.
எனவே கேரள முதல்வர் இதில் தலையிட்டு சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பை அதிகரிக்கவேண்டும். எதிர்காலத்தில் இந்த அணையில் 878.50 மீட்டர் வரை நீர் தேக்கி வைக்கப்பட்டால் தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய 101.4 டிஎம்சி நீர் கிடைக்கும். எனவே நீர் சேமிப்பை அதிகரிக்கவும் தமிழகத்துக்குத் தர வேண்டிய நீரை அளிக்கவும் உத்தரவிட வேண்டும்: என வலியுறுத்தி உள்ளார்.