சென்னை

சென்னை உயர்நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக மின்வாரிய அதிகாரிகளை நேரில் ஆஜராக உத்தரவு இட்டுள்ளது.

கடந்த 2012-ல் அறிவிக்கப்பட்ட சூரிய மின்சக்தி கொள்கையின்படி 3 ஆண்டுகளில் 3 ஆயிரம் மெகாவாட் உற்பத்தித்திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி ஆலையை உருவாக்க தமிழக மின் வாரியம் திட்டமிட்டது.  இதற்காக விருதுநகர் மாவட்டம் வீரசோழன் என்னுமிடத்தில் 100 மெகாவாட் சூரிய மின் ஆலையை அமைக்க அல்அமீன் கிரீன் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு ஒப்பந்தம் தரப்பட்டது.

அதன்படி முதற் கட்டமாக 40 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி ஆலை அமைக்க ரூ.5 கோடி வைப்பீடு உட்பட ரூ.175 கோடி செலவில் உற்பத்தியைத் தொடங்க பணிகள் நடந்தது. நிறுவனம் குறித்த காலத்துக்குள் உற்பத்தியைத் தொடங்கவில்லை எனக்கூறி டான்ஜெட்கோ அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தது.

அந்த நிறுவனம் இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அந்த தனியார் நிறுவனம் செயல்பட அனுமதி வழங்கி உத்தரவிட்டது. நிறுவனம் அனுமதி கோரியபோது புதிய திட்டமாகக் கருதி மேலும் ரூ.2.50 கோடி வைப்பீடு தொகை செலுத்த டான்ஜெட்கோ உத்தரவிட்டது. தனியார் நிறுவனம் சார்பில் அதை எதிர்த்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

தமிழக அரசு சார்பில் ரூ.2.50 கோடி வைப்பீடு தொகை செலுத்தாமல் மனுதாரரின் நிறுவனம் செயல்பட அனுமதி வழங்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அதை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றம் அந்த அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தது.

நிறுவனம் சூரிய மின் உற்பத்தி ஆலை தொடங்க அனுமதி கோரியபோது உயர் நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்துக்கு முரணாக மீண்டும் ரூ.2.50 கோடி செலுத்த டான்ஜெட்கோ உத்தரவிட்டது.  எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது அல் அமீன் கிரீன் எனர்ஜி நிறுவனம் சார்பில் மீண்டும் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பாக நடந்த  இந்த வழக்கில், 

”நீதிமன்ற உத்தரவு அவமதிக்கப்பட்டுள்ளதாகக் கருதுவதற்கு அடிப்படை முகாந்திரம் உள்ளது.  எனவே தமிழ்நாடு  எரிசக்தித் துறைச் செயலாளர்,  டான்ஜெட்கோ  இயக்குநர்,  தமிழ்நாடு மின் வாரிய தலைவர்,  தமிழ்நாடு மின்சார  ஒழுங்குமுறைத் தலைவர் மற்றும்  அமைப்பு சாரா  எரிசக்தி பிரிவு தலைமைப்  பொறியாளர் ஆகியோர்  4 வாரங்களில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும்” 

என உத்தரவிட்டு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.