டில்லி
மூக்கு வழியாகச் செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து மூன்றாம் கட்ட சோதனைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
கொரோனா மூன்றாம் அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையொட்டி இந்தியாவில் தடுப்பூசிகள் போடும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 165 கோடிக்கும் அதிகமானோருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மக்களில் ஒரு சிலர் தடுப்பூசி போட்டுக் கொள்ள அச்சம் கொள்வதால் மாற்று வழிகள் குறித்த ஆலோசனை நடைபெற்றது.
எனவே பாரத் பயோடெக் நிறுவனம் மூக்கு வழியாகச் செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து கண்டறிந்தது. இந்த மருந்துகளை ஏற்கனவே 2 கட்ட சோதனைகள் நடந்துள்ளன. இந்நிலையில் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு மூன்றாம் கட்ட சோதனையாக மனிதர்களுக்கு வழங்க நிறுவனம் விண்ணப்பித்தது.
அந்த விண்ணப்பத்தின் மற்றும் 2 கட்ட சோதனை குறித்த தரவுகளின் அடிப்படையில் தற்போது மூன்றாம் கட்ட சோதனைக்கு மத்திய மருந்து ஆராய்ச்சிக் கழகம் அனுமதி அளித்துள்ளது. இதன்படி 900 பேருக்கு இந்த மருந்து செலுத்தி சோதனை நடைபெற உள்ளது. இந்த சோதனை முடிவில் இந்த மருந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது பற்றி அரசு முடிவு எடுக்க உள்ளது.
இந்த தடுப்பு மருந்து சோதனை முடிய சுமார் 1 முதல் 2 மாதங்கள் ஆகலாம் எனவும் அந்த சோதனை முடிவில் அனுமதி கிடைத்தால் உற்பத்தியைத் தொடங்கப்படும். அனுமதி கிடைத்த 6 முதல் 8 மாதங்களில் இந்த மருந்து இந்தியாவில் பயன்பாட்டுக்குக் கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.