சென்னை: சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் ஜனவரி 1ந்தேதி முதல் வேகமாக பரவத்தொடங்கிய கொரோனா தொற்று தற்போது குறைந்து வருவதாக தமிழகஅரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இருந்தாலும் தொற்று பாதிப்புக்கு ஆளாவோர் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது.
தொற்று பரவல் தடுப்பு பணியில் சென்னை காவல்துறையினரும் முன்களப் பணியாளர்களாக ஈடுபட்டு வரும் நிலையில், இதுவரை காவல்துறையில் மட்டும் சுமார் 2400-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. சென்னை காவல் துறையிலும் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார். சங்கர் ஜிவாலுக்கு லேசான காய்ச்சல் அறிகுறி தென்பட்டதால், அவருக்கு எடுக்கப்பட்ட சோதனையில், தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருடன் தொடர்பில் இருந்த அதிகாரிகளும், ஆலோசனை கூட்டங்களில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கும் அறிகுறிகள் இருந்தால் தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்த ப்பட்டுள்ளது. மேலும், காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வீட்டிலிருந்து அன்றாட அலுவல் பணிகளை காவல் ஆணையர் மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.