சென்னை
தமிழக அரசு வரும் கொரோனா கட்டுப்பாட்டில் பிப்ரவரி முதல் பள்ளிகள்,கல்லூரிகள் திறப்பு உள்ளிட்ட பல தளர்வுகளை அறிவித்துள்ளது.
தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசாணை எண்.25 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நாள் 07-01-2022-ன்படி, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வார நாட்களில் இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் நடைமுறையில் இருந்து வருகிறது.
மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் அறிவிக்கை எண்.40-3/2020/DM-I(A), நாள் 27.12.2021-ல் கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த தேவையான கட்டுப்பாடுகள் விதிக்கவும் மற்றும் அவசியம் ஏற்படின் குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973, பிரிவு 144-ன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளவும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் 27-1-2022 அன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், மாண்புமிகு மருத்துவம்-மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அரசு மேற்கொண்ட சீரிய நடவடிக்கையினால் கொரோனா நோய்த் தொற்று பரவல் தற்போது குறைந்துள்ளதாகவும், போதுமான மருத்துவ கட்டமைப்புகள் தயார் நிலையில் இருப்பினும் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள உள்நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாகச் சுகாதாரத் துறையால் தெரிவிக்கப்பட்டது
மேலும், மாநிலத்தின் வேலைவாய்ப்பு, பொருளாதாரம், மாணவ – மாணவியர்களின் எதிர்காலம் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை மீளத் திரும்புவதற்கு ஏதுவாக, பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் பிப்ரவரி 1 முதல் திறக்கப்படுகின்றன. நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 1-2-2022 முதல் அனைத்து பள்ளிகளிலும் பயிலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும்.
தற்போது கொரோனா பாதுகாப்பு மையங்களாக (Covid Care Centre) செயல்படும் கல்லூரிகள் தவிர்த்து ஏனைய அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / தொழிற்பயிற்சி மற்றும் பயிற்சி நிலையங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 1-2-2022 முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. இதற்கான உரிய முன்னேற்பாடுகளைச் சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மேற்கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் 28-1-2022 முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையிலான ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படுகிறது.
வரும் ஞாயிற்றுக்கிழமை (30-1-2022) முழு ஊரடங்கு கிடையாது.
என அறிவிக்கப்பட்டுள்ளது.