சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேர்தல் அட்டவணை இன்று மாலை வெளியிடப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் நகராட்சி, பேரூராட்சி தேர்தலுக்கான தேதிகள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், இன்று மாலை தேர்தல் தேதி குறித்த அட்டவணை வெளியாகும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளது. நகராட்சி தேர்தலை பொறுத்தவரை, மாநகராட்சி மேயர், கவுன்சிலர்கள்; நகராட்சி தலைவர், கவுன்சிலர்கள்; பேரூராட்சி தலைவர், கவுன்சிலர்கள் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் உள்ளன. இதில், கவுன்சிலர் பதவிகளுக்கு பொதுமக்கள் ஓட்டளித்து, நேரடியாக பிரதிநிதிகளை தேர்வு செய்ய வேண்டும். மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு நேரடி தேர்தல் நடத்துவதா; தேர்வு செய்யப்பட்ட கவுன்சிலர்கள்வாயிலாக மறைமுக தேர்தல் நடத்துவதா என்பது, அரசின் முடிவை பொறுத்து அமையும்.
தற்போது, தேர்தலுக்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தல்களுக்கான தேதியை மாநில தேர்தல் ஆணையம் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியிடுவதாக அறிவித்து உள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் அட்டவணையை தமிழக மாநில தேர்தல் ஆணையம் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியிட இருப்பதாக கூறி, பத்திரிகையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுஉள்ளது.