சென்னை: கொரேனா பரவல் காரணமாக, ஒத்தி வைக்கப்பட்ட பொறியியல் படிப்புக்கான செமஸ்டர் தேர்வு அட்டவணையை  அண்ணா பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி, செமஸ்டர் தேர்வுகள்   பிப்ரவரி 1-ஆம் தேதி தொடங்கி மார்ச் முதல் வாரம் நிறைவடைகிறது; தேர்வானது ஆன்லைனில் நடைபெறும் என்றும், தேர்வானது,  காலை, மாலை என இருவேளைகளிலும் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் நடப்பாண்டு முதல் கல்லூரி தேர்வுகள் மீண்டும் ஆஃப் லைன், அதாவது நேரடித்தேர்வாகவே நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம், உயர்கல்வித் துறை தெரிவித்து வந்த நிலையில், கொரோனா 3வது அலை பரவல் காரணமாக, மீண்டும் இறுதியாண்டு தேர்வினை தவிர அனைத்துக் கல்லூரி பருவ தேர்வுகளையும் ஆன்லைனில் நடத்துவது என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., பயிலும் மாணவர்களுக்கான ஆன்லைன் செமஸ்டர் தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைகழக இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைகழகத்தின் இணைய முகவரியில் தெரிந்துக்கொள்ளலாம்.

பிப்ரவரி 1 முதல் மார்ச் முதல் வாரம் வரை காலை, மாலை என இருவேளைகளிலும் தேர்வுகள் நடத்தப்படும் வகையில் தேர்வு அட்டவணை உருவாக்கப்பட்டுள்ளது.

கல்லூரி பருவத் தேர்வுகள் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் நடைபெறும் என்று தமிழக உயர்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில், பாடவாரியாக தேர்வு அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.