சென்னை: தமிழகம் முழுவதும் இன்று 50 ஆயிரம் மையங்களில் 19-வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி உள்ளது. இதுவரை தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள், 2வது டோஸ் தடுப்பூசி போடாதவர்கள் உடனே தடுப்பூசி செலுத்திக்கொள்ளும்படி சுகாதாரத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாபாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை களையும், கட்டுப்பாடுகளையும் தீவிரப்படுத்தி உள்ளது. அத்துடன் தடுப்பூசி செலுத்தும் பணியையும் தீவிரப்படுத்தி உள்ளது. அதன்படி, வாரந்தோறும்,சனிக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில், பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த வாரம் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவில்லை.
இதையடுத்து இன்று மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி உள்ளது. தமிழகத்தில் தற்போது வரை 18 மெகா தடுப்பூசி முகாம்கள் நடந்துள்ளது. இன்று 19வது தடுப்பூசி முகாம் மாநிலம் முழுவதும் சுமார் 50 ஆயிரம் இடங்களில் நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இந்த தடுப்பூசி முகாம் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த முகாமில் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர் களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.எனவே,அருகில் உள்ள தடுப்பூசி முகாம் மையங்களுக்கு சென்று தங்களுக்குரிய முதல் தவணை அல்லது இரண்டாவது தவணையை பொதுமக்கள் செலுத்திக் கொள்ளுமாறு மருத்துவத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளர்கள்.
இந்த முகாமில், முன்களப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தப்பட்டவுள்ளதாக கூறப்படுகிறது.