டெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் நேதாஜிசுபாஷ் சந்திரபோஸ்-க்கு பிரம்மாண்டமான பளிங்கு சிலை அமைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்து உள்ளார்.
இந்திய விடுதலைக்காக போராடிய தலைவர்களில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்-ம் ஒருவர். இந்திய ராணுவத்தை உருவாக்கிய பெருமையும் நேதாஜியையே சேரும். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1897 ஜனவரி 23-ம் தேதி பிறந்தார். நாளை மறுநாள் (ஜன.23) நேதாஜியின் 125-வது பிறந்தநாள் தினம் கொண்டாடப்பட உள்ளது.
இதையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட் பதிவில், டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் பிரமாண்டமான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பளிங்கு சிலை நிறுவப்படும் என தெரிவித்து உள்ளார்.
மேலும், “நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்தநாளை ஒட்டுமொத்த தேசமும் கொண்டாடும் இவ்வேளையில்,கிரானைட் கற்களால் ஆன அவரது பிரமாண்ட சிலை இந்தியா கேட்டில் நிறுவப்படும் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது அவருக்கு இந்தியாவின் கடனாளியின் அடையாளமாக இருக்கும். நேதாஜி அவர்களின் பிரமாண்ட சிலை கட்டி முடிக்கப்படும் வரை, அவரது ஹாலோகிராம் சிலை (மின் ஒளியில் திரையிடப்படும்) அதே இடத்தில் இருக்கும். நேதாஜியின் பிறந்தநாளான ஜனவரி 23 ஆம் தேதி ஹாலோகிராம் சிலையை திறந்து வைப்பேன்”, என்று தெரிவித்துள்ளார்.
இந்தியா கேட் பகுதியில் உள்ள அமர் ஜவான் ஜோதி இன்று இடமாற்றம் செய்யப்படும் நிலையில், அங்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை அமைக்கப்பட உள்ளது.