சென்னை: இளநிலை மருத்துவ படிப்பான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான கலந்தாய்வு வருகிற 27–-ந் தேதி தொடங்கி நடைபெற இருக்கிறது. இதில் முதல்முறையாக பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு மட்டும் ஆன்லைனில் நடக்கிறது.
இடஒதுக்கீடு வழக்கு காரணமாக, மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், உச்சநீதிமன்றம் கலந்தாய்வை நடத்தலாம் என பச்சைக்கொடி காட்டியதைத் தொடர்ந்து, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. தற்போது அகில இந்திய இடஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில், பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு 27–-ந் தேதி தொடங்குகிறது. இந்த முறை கலந்தாய்வு ஆன்லைன் மூலமே நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் உள்ள 4 ஆயிரத்து 349 இடங்கள், சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் உள்ள 2 ஆயிரத்து 650 இடங்கள் என மொத்தம் 6 ஆயிரத்து 999 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கும், அதேபோல் அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் இருக்கும் 1,930 பி.டி.எஸ். இடங்களுக்கும் நடப்பாண்டில் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறுகிறது.
இதுதொடர்பான அறிவிப்பை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். அதன்படி, இளநிலை மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவ, -மாணவிகளில் தகுதியானவர்களுக்கான தரவரிசை பட்டியல் வருகிற 24-ந்தேதி (திங்கட்கிழமை) மாலை வெளியிடப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து வருகிற 27-–ந்தேதி (வியாழக்கிழமை) சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடக்கிறது. தொடர்ச்சியாக 28–-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மற்றும் 29–-ந் தேதி (சனிக்கிழமை) அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வுகள் அனைத்தும் நேரடியாகவே நடத்தப்பட இருக்கிறது.
அதையடுத்து பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு வருகிற 30–-ந் தேதி (ஞாயிற்றுகிழமை) முதல் தொடங்கி நடைபெறுகிறது. இந்த கலந்தாய்வு கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு ஆன்லைனில் நடத்தப்பட உள்ளது. முதல்முறையாக மருத்துவப்படிப்புக்கான கலந்தாய்வு, ஆன்லைனில் நடக்க இருக்கிறது.
மேலும் இதுதொடர்பான முழு விவரங்கள் www.tnmedicalselection.org, www.tnhealth.tn.gov.in என்ற இணையதளங்களில் வெளியிடப்படும் என்றும், தரவரிசை பட்டியல் வெளியிடும்போதும் கூடுதல் தகவல்கள் தெரிவிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
அதேபோல், எம்.டி., எம்.எஸ். போன்ற முதுநிலை மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதனை அமைச்சர் மா.சுப்பிர மணியன் வெளியிட்டார். அப்போது மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவ மாணவர் சேர்க்கை செயலாளர் வசந்தாமணி உள்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
முதுநிலை மருத்துவ பட்டமேற்படிப்புக்கு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து, அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 1,053 இடங்கள் போக, மாநில ஒதுக்கீட்டு இடங்களான 1,163 இடங்களுக்கு கலந்தாய்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்த கலந்தாய்வு ஆன்லைன் மூலமாக நடக்க உள்ளது. அதன்படி இன்று முதல் 3 நாட்களுக்கு பதிவு செய்வதற்கு அவகாசம் வழங்கப்படும் என்றும், அதனைத்தொடர்ந்து விருப்ப இடங்களை தேர்வு செய்வது போன்ற நடைமுறைகள் நடக்கும் என்றும் மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஏற்கனவே நர்சிங், பிசியோதெரபி உள்பட 16 ஆயிரத்து 693 இடங்களுக்கான துணை மருத்துவப் படிப்புகளுக்கு கலந்தாய்வு நடந்து முடிந்தது. அதில் 16 ஆயிரத்து 486 இடங்கள் நிரப்பப்பட்டு விட்டன. மீதம் 207 இடங்கள் இருக்கின்றன’.
மருத்துவப் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கும் இடம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கோடு, கடந்த ஆண்டு அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு என்று 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டு, அதன் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்பட்டது.
அதன்படி, கடந்த கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் படித்து, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 436 மாணவ-, மாணவிகளுக்கு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் இடங்கள் கிடைத்தன. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு மூலம் இடங்கள் கிடைக்க இருக்கிறது. இந்த ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கின்ற காரணத்தினால், கடந்த ஆண்டை விட கூடுதல் இடங்கள் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கிடைத்துள்ளன.
அந்த வகையில் அரசு பள்ளிகளில் படித்து, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, -மாணவிகளுக்கு 436 எம்.பி.பி.எஸ். இடங்களும், 98 பி.டி.எஸ். இடங்களும் என மொத்தம் 534 இடங்கள் கிடைக்கும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.