லக்னோ: உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவின் உறவினரும், சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவின் மருமகளுமான அபர்ணா யாதவ் பாஜகவில் இணைந்துள்ளார்.
சமீபத்தில், உ.பி. மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என 7 பேரை சமாஜ்வாதி கட்சி தங்களது அணிக்கு இழுந்த நிலையில், சமாஜ்வாதி கட்சி தலைவரின் குடும்ப உறுப்பினரை பாஜக தூக்கி உள்ளது.
403 தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேச சட்டமன்ற ஆட்சி காலம் 2022ம் ஆண்டு மே மாதம் 14ந்தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்னதாக அங்கு சட்டமன்ற தேர்தல் நடத்தி முடிக்கும் வகையில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. பிப்ரவரி 10, 14, 20, 23, 27 மற்றும் மார்ச் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
இதையடுத்து அங்கு அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்துள்ளன. ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சி தீவிரமாக பணியாற்றி வருகிறது. அதே வேளையில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள யோகி தலைமையிலான பாஜகவும் போராடி வருகிறது. இதற்கிடையில், சமாஜ்வாதி கட்சி, யோகி அமைச்சரவையில் இடம்பெற்ற அமைச்சர்கள், எம்எல்ஏக்களை தனது கட்சிக்கு அழைத்து வந்து, யோகிக்கு பயத்தை காட்டி உள்ளது. அங்கு பல முனை போட்டி நிலவி வருகிறது.
இந்த நிலையில், அகிலேஷ் யாதவின் உறவினரும், முலாயம்சிங் யாதவின் மருமகளுமான அபர்ணா யாதவை பாஜக தன்பக்கம் இழுத்துள்ளது. அவர் இன்று உத்திரப்பிரதேச துணை முதல்வர் கேசவ பிரசாத் மவுரியா முன்னிலையில் அபர்ணா யாதவ் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இது உத்தரப் பிரதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
உத்தரப் பிரதேசத்தில் ஆளும் வுக்கு பிரதான போட்டியாளராக சமாஜ்வாதி கட்சி திகழ்ந்து வரும் நிலையில், கட்சி தலைவரின் குடும்ப உறுப்பினர் பாஜகவில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாஜகவில் இருந்து அடுத்தடுத்து பலர் சமாஜ்வாதி கட்சியில் இணைந்து வந்தது, பாஜகவுக்கு இழப்பு என கருதப்பட்ட நிலையில், அகிலேஷ் யாதவின் நெருங்கிய உறவினரை வளைத்துப் போட்டு பதிலடி தந்துள்ளது பாஜக. முலாயம் சிங் யாதவின் மருமகளும், அகிலேஷ் யாதவின் சகோதரரான பிரதீக் யாதவின் மனைவி அபர்னா யாதவ் இன்று பாஜகவில் இணைந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.
இதுகுறித்து செய்தியளார்களிடம் பேசிய அபர்ணா, தன்னைப் பொறுத்தவரையில் நாடு தான் உயர்ந்தது. நாட்டுக்கு சேவை செய்வதற்காக நான் பாஜகவுக்கு வந்துள்ளேன், பிரதமர் மோடியால் நடவடிக்கையால் தான் ஈர்க்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். அபர்னா பாஜகவில் இணைந்திருப்பது அகிலேஷ் யாதவுக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.
32 வயதாகும் அபர்னா, கடந்த 2017 சட்டமன்ற தேர்தலில் லக்னோ கண்டோன்மெண்ட் தொகுதியில் சமாஜ்வாதி வேட்பாளராக போட்டியிட்டு பாஜக வேட்பாளர் ரிதா பகுகுனா ஜோஷியிடம் தோல்வி அடைந்தார். அபர்னாவின் bAware அமைப்பு பெண்கள் நல்வாழ்வுக்காக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.