சென்னை
தமிழக பள்ளிக் கல்வித்துறை 10-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குக் கல்வித் தொலைக்காட்சி, செல்போன் செயலி மூலம் கற்பித்தலைத் தொடர அறிவுறுத்தி உள்ளது.
கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாகத் தமிழகத்தில் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் ஜனவரி 31 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதை விடுமுறையாகக் கொண்டாடாமல் மாணவர்கள் ஆக்க பூர்வமாக பயன்படுத்த வேண்டும் என மாணவர்களுக்குப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி அறிவுறுத்தி இருந்தார்.
இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், “தேவையான கட்டமைப்பு வசதிகள் உள்ளதால் தனியார்ப் பள்ளிகளில் இணைய வழியில் மாணவர்களுக்குப் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதைப் போல் அரசுப் பள்ளிகளில் 10-12 ஆம் வகுப்பில் பயில்பவர்களுக்கும் கல்வித் தொலைக்காட்சி, செல்போன் செயலிகள் மூலமாக கற்றல்பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். தவிர 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்குக் கூடுதல் கவனம் செலுத்தி துரிதமாகப் பாடங்களை நடத்தி முடிக்க வேண்டும்.
பிறகு வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகத்தளங்கள் வழியாக வாரம்தோறும் பாட வாரியாக குறுந்தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். இந்த குறுந்தேர்வில் மாணவர்கள் குறைவாக மதிப்பெண் பெறும் பகுதிகளைக் கண்டறிந்து ஆசிரியர்கள் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் இந்த பணிகளைத் தொடர்ந்து கண்காணிப்பார்கள்.” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.