சென்னை:
11 மாநகராட்சிகளின் மேயர் பதவியை பெண்களுக்கு ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 6 மாநகராட்சிகள் உட்பட 21 மாநராட்சிகள், 138 நகராட்சிகள், 649 பேரூராட்சிகள் உள்ளன. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், விரைவில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது.
மாநகராட்சிகளுக்கு வார்டு வரையறை செய்வது தொடர்பான இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தற்போது மேயர் பதவிகள் இட ஒதுக்கீடு அடிப்படையில் பிரிக்கப்பட்டு, 11 மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, தமிழக நகராட்சி நிர்வாக செயலர் ஷிவ்தாஸ் மீனா வெளியிட்ட அரசாணையில் நகராட்சி நிர்வாக இயக்குநர் கடந்த ஜன.11ம் தேதி அரசுக்கு அனுப்பிய கடிதத்துடன், வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி மேயர் பதவிகளை இட ஒதுக்கீடு அடிப்படையில் பிரிப்பது தொடர்பான கருத்துருவை அனுப்பியிருந்தார்.
இதை கருத்தில் கொண்டு விதிகளில் திருத்தம் செய்து அரசாணை வெளியிடவும் கேட்டிருந்தார். அதன் அடிப்படையில், கருத்துருவை பரிசீலித்த தமிழக அரசு, ஆதிதிராவிடர் (பொது), ஆதிதிராவிடர் (பெண்கள்) பொது (பெண்கள்) ஆகிய பிரிவினருக்கு மேயர் பதவிகள் ஒதுக்குவதற்கான உத்தரவை வெளியிட்டுள்ளது.
அதன்படி, சென்னை மாநகராட்சி மற்றும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தாம்பரம் மாநகராட்சிகளின் மேயர் பதவிகள் ஆதிதிராவிடர் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆவடி மாநகராட்சி மேயர் பதவி ஆதிதிராவிடர் (பொது) பிரிவுக்கும், கடலூர், திண்டுக்கல், வேலூர், கரூர், சிவகாசி, காஞ்சிபுரம், மதுரை, கோவை, ஈரோடு ஆகிய 9 மாநகராட்சிகளின் மேயர் பதவிகள் பெண்களுக்கு (பொது) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.