சென்னை

சென்னை நகரில் 15-17 வயதுடையோரில் 66% பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

நாடெங்கும் கொரோனா மூன்றாம் அலை பாதிப்பு தீவிரமாகி உள்ளது.  ஏற்கனவே 18 வயதை தாண்டியோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.  தற்போது நாடெங்கும் 15-17 வயது உடையோருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றது.

சென்னையில் அனைத்து பள்ளிகளிலும் 15 – 17 வயதாகும் மாணவர்களுக்குத் தடுப்பூசி போடப்படுகிறது..   மேலும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களிலும் சிறார்களுக்குத் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது.   இது குறித்து சென்னை மாநகராட்சி ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பின்படி சென்னையில் 15-17 வயதான சிறார்கள் 5,53,772 பேர் உள்ளனர் எனவும் அதில் 1,66,973 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதாவது 66% சிறார்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

அதிகபட்சமாக அடையாறு பகுதியில் 16,626 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  குறைந்த பட்சமாக மணலி பகுதியில் 2,627 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.