சென்னை: டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்தி நிராகரிப்பு செய்யப்பட்டதற்கு,  பிரதமர் மோடிக்கு  முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்ள கோரிக்கை செய்து, தமிழக அரசு சார்பில் வ.உ.சி, வேலுநாச்சியார், பாரதியார், கப்பலோட்டிய தமிழர் உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்களின் உருவப்படங்கள் அடங்கிய ஊர்திகள் காண்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட ஊர்திகள் மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டுள்ளது.  26ம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் ஒவ்வொரு மாநிலத்தின் பாரம்பரியம் மற்றும் வரலாற்றினை போற்றும் விதமாக அலங்கார ஊர்திகள் பங்கேற்கும். இந்தாண்டு அணிவகுப்பில் 12 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் மட்டும் பங்கேற்க உள்ளதாகவும், தமிழகம், மேற்கு வங்கம், கேரளாவின் ஊர்திகள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதற்கு கட்சித்தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, மத்திய அரசு  விளக்கம் தெரிவித்து உள்ளது. அதில், மத்திய அரசு நிர்ணயித்த அளவீடுகளின் அடிப்படையில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் வடிவமைக்கப்படவில்லை, அதனால் நிராகரிக்கப்பட்டதாகவும்,  அடுத்தாண்டு அனைத்து மாநில ஊர்திகளும் பங்கேற்கும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். குடியரசு தின அணிவகுப்பில், தமிழ்நாட்டிலிருந்து நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வீரர்களின் உருவங்கள் அடங்கிய ஊர்தி இடம்பெறுவது மறுக்கப்பட்டிருப்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின்,  பிரதமர்  மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது,

குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்தி நிராகரிக்கப்பட்டது ஏமாற்றமளிக்கிறது. வ.உ.சி, பாரதி, வேலு நாச்சியார், மருது சகோதரர்கள் படங்கள் அடங்கிய ஊர்தி நிராகரிப்பு ஏமாற்றமளிக்கிறது. பிரதமர் இதில் உடனே தலையிட்டு விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழகத்தின் பங்களிப்பு இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் . குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்தி இடம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.