சென்னை: கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்களே உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் தெரனிராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து தொற்று பரவலை கட்டுப்படுத்த, கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டு உள்ளன. மேலும் ஜனவரி 6-ம் தேதி முதல் இரவு நேர லாக்டவுன் மற்றும் ஞாயிறு முழு லாக்டவுனும் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் விரைவில், முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், மாநிலம் முழுவதும் நேற்று மட்டும் 23,989 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதிக பட்சமாக சென்னையில் 8,987 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 1,42,476 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் தெரனிராஜன், தற்போது கொரோனா தொற்று காரணமாக, 18 பேர் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இவர்களில் 2 பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளனர். மற்றவர்கள் ஒரு டோஸ் தடுப்பூசி கூட எடுக்கவில்லை. முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட 2 பேருக்கு வேறு எந்தவொரு பாதிப்பும் இல்லை. அதனால் அனைவரும் எந்தவித பயமுமின்றி, உயிரை காத்துக்கொள்ள தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.