ஞ்சை

புவிசார் குறியீடு அளிக்கக் கும்பகோணம் வெற்றிலை, மற்றும் தோவாளை மாணிக்கமாலைக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.  

அறிவுசார் சொத்துரிமை அட்டர்னி சங்கத் தலைவரும், புவிசார் குறியீடு வழக்கறிஞருமான சஞ்சய் காந்தி நேற்று தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர், ”தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 9 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. ஆனால் விவசாயம் சார்ந்த பொருட்களுக்கு இதுவரை புவிசார் குறியீடு கிடைக்காமல் இருந்தது.

இதையொட்டி புகழ்பெற்ற ”கும்பகோணம் வெற்றிலை”க்கு புவிசார் குறியீடு கேட்டு அதற்கான விண்ணப்பத்தைச் சென்னையில் உள்ள புவிசார் குறியீடு பதிவகத்தில் கடந்த 13ம் தேதி தாக்கல் செய்துள்ளோம்.  இந்த வெற்றிலை காவிரி ஆற்றுப் படுகையில் அதிலும் கும்பகோணம் பகுதியில் இந்த வெற்றிலை சிறப்பாக விளைவிக்கப்படுவதால், கும்பகோணம் வெற்றிலை எனப் பெயர் பெற்று விளங்குகிறது.

கும்பகோணம் வெற்றிலையை புவிசார் குறியீடு கேட்டு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

இதைப்போல் கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளையைச் சுற்றியுள்ள பகுதிகளில் விளைவிக்கப்படும் பூக்களின் வாசம் மற்ற பூக்களைக் காட்டிலும் தனித்துவம் வாய்ந்தது.   குறிப்பாக தோவாளையில் மட்டும் உற்பத்தி செய்யப்பட்டு, பின்னப்படும் பூக்களுக்கு இந்தியாவில் அதிக மவுசு உள்ளது.

வெள்ளை, சிவப்பு அரளிப்பூக்களைச் சம அளவில் கட்டுகிறபோது அது மாணிக்கம் போன்று தோற்றமளிப்பதால் மாணிக்கமாலை என பெயர் பெற்றது. இத்தகைய தோவாளை மாணிக்கமாலைக்குக் கைவினை கலைஞர்கள் சார்பில், புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.