கணினிப் பூக்கள்
கவிதைத் தொகுப்பு – பகுதி 9
பா. தேவிமயில் குமார்
தேநீர் நேரம்
தேநீர் கோப்பைகளுக்கு
திகட்டுகிறதாம்
உன் ! இதழ் பட்ட
இனிப்பால் !
சற்று அண்ணாந்து
குடித்து விடேன் !
உன் கோப்பைத்
தேநீரையும்
எனக்கு தந்துவிடு
உன் புன்னகை பட்டதால்
அதுவும் நாணுகிறது !
நீ அறிமுகப்படுத்திய
தேநீர் பழக்கம்
உன்னை போலவே…
ஓடி ஒளிந்து கொண்டாலும்
தேடி வருகிறது
தீராத நினைவுகளாக !
தேநீருக்கு பிறகான
எந்த சிற்றுண்டியும்
தேவைப்படாது
உன் நினைவுகளை
அசை போடுவதால் !
அந்த தேநீர் கடை
இருக்கை
எப்படி நம்மை
நினைவில்
வைத்திருக்கிறது ?
நாம் போகும்போதெல்லாம்
நமக்காக காத்திருக்கிறது !
குறிப்பிட்ட
நிறுவனத்தின்
தேநீர் வாங்கி
வர சொல்கிறாய் ?
விபரமில்லையா
உனக்கு ?
தேநீர் பொடியில்
எதுவுமில்லை !
அற்புதம் எல்லாம்
உன் கரங்களில் தான் !
நாம் சந்தித்த
அந்த முதல்
நாள் அந்திப் பொழுது,
மீண்டும் கனவில்
மெல்ல வந்தது !
அன்று அருந்திய
தேநீரை இன்னும்
விடவில்லை
ஆனால்…
எப்போதும்
சந்திக்கும்
அந்த நேரத்தை
எங்கே தொலைத்தீர்கள் என்று !?
ஆம், எங்கு தொலைத்தோம் நாம் ?