மும்பை: உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் சிவசேனா தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் மூத்தத் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். இது பாஜகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக அங்கு பலமுனை போட்டி உருவாகி உள்ளது.
403 தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேச சட்டமன்ற ஆட்சி காலம் 2022ம் ஆண்டு மே மாதம் 14ந்தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்னதாக அங்கு சட்டமன்ற தேர்தல் நடத்தி முடிக்கும் வகையில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. உத்தரபிரதேசத்தில் பிப்ரவரி 10, 14, 20, 23, 27 மற்றும் மார்ச் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
இதையடுத்து அங்கு அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்துள்ளன. ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சி தீவிரமாக பணியாற்றி வருகிறது. அதே வேளையில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள யோகி தலைமையிலான பாஜகவும் போராடி வருகிறது. இதற்கிடையில், சமாஜ்வாதி கட்சி, யோகி அமைச்சரவையில் இடம்பெற்ற அமைச்சர்கள், எம்எல்ஏக்களை தனது கட்சிக்கு அழைத்து வந்து, யோகிக்கு பயத்தை காட்டி உள்ளது. இந்த நிலையில், தற்போது, சிவசேனா கட்சியும், தனித்து போட்டியிடுவதாக மிரட்டி உள்ளது.
இதற்கிடையில் உத்தரப் பிரதேசத்தில் சிவசேனா தனித்து போட்டியிடும் சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் அறிவித்துள்ளார். அவர் இன்று விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத்தை சந்தித்து பேச உள்ள நிலையில், தனித்து போட்டியிடுவோம் என்றும் கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் ராவத், “நாங்கள் பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி உள்பட எந்தவொரு கட்சியுடனும் கூட்டணி வைக்க மாட்டோம். நாங்களும் சமாஜ்வாதி கட்சியினரும் சித்தாந்த ரீதியாக மாறுபட்டவர்கள். ஆகவே நாங்கள் அவர்களுடன் செல்ல மாட்டோம். ஆனால்,இ உத்தரப் பிரதேசத்தில் மாற்றம் தேவை” அதை கொண்டு வரவும், “உத்தரப் பிரதேசத்தின் வளர்ச்சிக்காக சிவசேனா தொடர்ந்து பாடுபட்டுவருகிறது” என்றும் அவர் கூறினார்.
“நாங்கள் அயோத்தி இயக்கத்தின் ஒரு பகுதியாக உள்ளோம். மதுராவிலும் ஒரு இயக்கமாக செயல்படுவோம். குறைந்து 50 முதல் 100 இடங்களில் போட்டியிடுவோம் என்றும், விவசாயிகள் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய விவசாயிகளின் மிகப்பெரிய தலைவர் ராகேஷ் திகாயத். நான் அவரை சந்திப்பேன். அவரது கருத்தை அறிய விரும்புகிறேன். அதன்பிறகு, எனது கருத்தை தெரிவிக்கிறேன் என்றார்.
முன்னதாக செவ்வாயன்று, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரும் உத்தரபிரதேசத்தில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என்று அறிவித்தார். உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி தலைமையிலான முன்னணியுடன் கூட்டணி சேரும் என்று கூறிய பவார், அடுத்த வாரம் கூட்டப்படும் கூட்டத்தில் கலந்து கொண்டு, வட மாநிலத்திற்கான கூட்டணிகள் மற்றும் தேர்தல் உத்திகள் குறித்து ஆலோசித்து இறுதி செய்யப்போவதாகவும் கூறினார்.
உ.பி. சட்டமன்ற தேர்தலில் பலமுனை போட்டி நிலவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதி கட்சிகள் காங்கிரஸ், பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று அறிவித்துள்ள நிலையில், தற்போது சிவசேனாவும் தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்து உள்ளது. இதனால் வாக்குகள் பிரியும் வாய்ப்பு உருவாகி உள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற உ.பி. சட்டமன்ற தேர்தலில், பாஜக 312 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. சமாஜ்வாதி கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 114 இடங்களில் வெறும் 7 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.