சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி நாளை (ஜனவரி 14ந்தேதி) உள்ளூர் விடுமுறை அளித்திடும்படி, கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
அண்டை மாநிலமான கேரளாவிலும் ஏராளமான தமிழகர்கள் வசத்து வருகின்றனர். குறிப்பிட்ட 6 மாவட்டங்களில் அதிக அளவிலான தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் தமிழர்களின் பண்டிகைகளை கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், கேரளாவில் தமிழ் பேசும் மக்கள் அதிகம் வாழும் 6 மாவட்டங்களுக்கு ஜனவரி 14 அன்று பொங்கல் பண்டிகையை கொண்டாட உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கக்கோரி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், “தமிழ் பேசும் மக்கள் வாழும் கேரளாவின் 6 மாவட்டங்களுக்கு பொங்கலை ஒட்டி உள்ளூர் விடுமுறை அறிவிப்பது குறித்த கோரிக்கை தொடர்பாக தங்கள் அன்பான, உடனடி கவனத்தை ஈர்க்க விழைகிறேன்.
கடந்த 12 ஆண்டுகளாக, கேரள அரசு ஜனவரி 14-ம் தேதி பொங்கல் பண்டிகைக்கான உள்ளூர் விடுமுறையாக அறிவித்து வருகிறது என அறிகிறேன். ஆனால் இந்த வருடம், ஜனவரி 15ம் தேதி இந்த 6 மாவட்டங்களிலும் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தமிழ் பேசும் மக்கள் அதிகம் வாழும் 6 மாவட்டங்களுக்கு ஜனவரி 14 அன்று பொங்கல் பண்டிகையை கொண்டாட உள்ளூர் விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.