டில்லி
கொரோனா பரவல் நாடெங்கும் அதிகரிப்பதால் மாநில முதல்வர்களுடன் இன்று பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.
நாடெங்கும் மூன்றாம் அலை கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.4 லட்சத்தை தாண்டி உள்ளது. இதையொட்டி அனைத்து மாநிலங்களிலும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமலாக்கி உள்ளது.
மேலும் நாடெங்கும் உள்ள 15 முதல் 18 வயதாகும் சிறார்களுக்குத் தடுப்பூசி செலுத்துதல், முன்களப் பணியாளர்கள், இணை நோய் உள்ளோர், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது. நிதி ஆயோக் உறுப்பினர் வி கே பால் ஒமிக்ரான் வகை வைரஸ் டெல்டாவின் இடத்தை பிடித்துள்ளதால் இது குறித்து கவனமாக இருக்க எச்சரித்துள்ளார்.
இன்று மாநில முதல்வர்களைப் பிரதமர் மோடி காணொலி மூலம் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனையில் மகாராஷ்டிரா, மேற்குவங்கம், டெல்லி, தமிழகம், கர்நாடகா, உத்தரப் பிரதேசம், கேரளா, குஜராத் ஆகிய மாநிலங்களில் சிறப்பு கவனம் பற்றி ஆலோசிக்கப்பட உள்ளது இந்த மாநிலங்களில் பரவல் மிகவும் அதிகமாக இருப்பதால் கூடுதல் கண்காணிப்பு வளையத்துக்குள் வருகின்றன.