டெல்லி: அனைத்து மாநில அரசுகளும் ஆக்சிஜன் கையிருப்பை உறுதி செய்யுங்கள் மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதி உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1,94,720 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 442 ஆக பதிவாகியுள்ளது.இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,60,70,510 ஆக உள்ளது. மேலும்,நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,868 ஆக உயர்வு.
கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், ஆக்சிஜன் கையிருப்பை உடனே உறுதிப்படுத்துமாறு கோரி அனைத்து மாநில அரசுகளுக்கு,மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரச் செயலர் ராஜேஷ் பூஷன் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலர்களுக்கு,கடிதம் எழுதி யுள்ளார். அந்த கடிதத்தில்,குறைந்த பட்சம் 48 மணி நேரத்திற்கு தேவையான மருத்துவ ஆக்சிஜன் கையிருப்பில் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், திரவ நிலை மருத்துவ ஆக்சிஜனை எந்தவித தடையும் இல்லாமல் எடுத்து செல்லும் வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அனைத்து மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலர் லாவ் அகர்வால், இந்தியாவில் தொடர்ச்சியாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. நாட்டில் 9,55,319 பேர் கொரோனாவுக்கு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். 159 நாடுகளில் கரோனா அதிகரித்துள்ளது. ஐரோப்பாவின் 8 நாடுகளில் கடந்த இரண்டு வாரத்தில் இரு மடங்கு அதிகமான பரவல் ஏற்பட்டுள்ளது. தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக, கவலைக்குரிய மாநிலங்களாக மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், டெல்லி, தமிழகம், கர்நாடகம், உத்தரப் பிரதேசம், கேரளம் மற்றும் குஜராத் உள்ளன.
நோய்த் தொற்றின் உறுதியாகும் விகிதமானது மகாராஷ்டிரத்தில் 22.39%, மேற்கு வங்கத்தில் 32.18%, தில்லியில் 23.1% மற்றும் உ.பி.யில் 4.47% ஆக உள்ளன தென்ஆப்பிரிக்கா, பிரிட்டன், கனடா, டென்மார்க் நாடுகளின் தரவுகள்படி டெல்டாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை காட்டிலும் ஒமைக்ரானால் அனுமதிக்கப்படுவது குறைவாகத் தான் இருக்கும்.
பிரதமருடன் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு குணமடைந்தோர் வீடுகளுக்கு திரும்பும் கொள்கையில் மாற்றம் செய்துள்ளோம். ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெறுவோர் 93 சதவீதத்தை அடைந்தவுடன் மூன்று நாள்களுக்கு பிறகு வீட்டிற்கு செல்லலாம். லேசான அறிகுறிகளுடன் சிசிச்சை பெறுவோர் தொற்று உறுதி செய்யப்பட்டு 7வது நாள் வீடு திரும்பலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.