மருத்துவக்கல்லூரிகளை திறந்து வைத்து, நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தமிழக சகோதர, சகோதரிகளுக்கு எனது வணக்கம் என தமிழில் உரையை தொடங்கிய பிரதமர் மோடி தை பிறந்தால் வழி பிறக்கும் என்கிற பழமொழியை சுட்டிக்காட்டி மோடி உரையாற்றினார். அதோடு பொங்கல், மகரசங்கராந்தி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின் செழுமையால் நான் எப்போதும் ஈர்க்கப்பட்டேன் என்று புகழாரம் சூட்டினார். மேலும், ஐக்கிய நாடுகள் சபையில் உலகின் பழமையான மொழியான தமிழில் சில வார்த்தைகள் பேச வாய்ப்பு கிடைத்தது எனது வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்று என்றார்.
மேலும், கடந்த 2014-ல் நம் நாட்டில் 387 மருத்துவக் கல்லூரிகள் இருந்தன. கடந்த ஏழு ஆண்டுகளில் மட்டும் இந்த எண்ணிக்கை 596 மருத்துவக் கல்லூரிகளாக உயர்ந்துள்ளது. 2014 ஆம் ஆண்டுக்கு முன் நாட்டில் ஏழு எய்ம்ஸ் மருத்துவமனைகள் மட்டுமே இருந்தன, ஆனால் தற்போது, அனுமதிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகளின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.
வரவிருக்கும் ஆண்டுகளில், தரமான மற்றும் மலிவு விலையில் பராமரிப்புக்கான இலக்காக இந்தியா இருக்கும் என்று நான் கருதுகிறேன். மருத்துவச் சுற்றுலாவுக்கான மையமாகத் தேவையான அனைத்தையும் இந்தியா கொண்டுள்ளது, மேலும் டெலிமெடிசினையும் பார்க்க மருத்துவ சகோதரத்துவத்தை நான் கேட்டுக்கொள்கிறேன்.
அதிக அளவிலான மருத்துவ கல்லூரிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. ஒரே நாளில் ஒரே மாநிலத்தில் 11 மருத்துவ கல்லூரிகள் திறக்கப்படுவது தமிழகத்தில்தான். உ.பி.யில் சில நாட்களுக்கு முன்னர் 9 மருத்துவ கல்லூரிகளை திறந்து வைத்தேன். தமிழகத்தில் மேலும் 11 மருத்துவ கல்லூரிகளை திறந்து வைத்து என் சாதனையை முறியடித்துள்ளேன், என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டில் இன்று திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர், நீலகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்களில் தலா ஒரு மருத்துவ கல்லூரி வீதம் 11 மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்படுடஉள்ளது. இந்த ஒவ்வொரு கல்லூரியிலும் தலா 150 மாணவர்கள் வீதம் 1,650 மாணவர்களை சேர்ப்பதற்கு அகில இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
செம்மொழி நிறுவன கட்டிடத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். சென்னை பெரும்பாக்கத்தல் 70ஆயிரம் சதுர அடியில் ரூ.24 கோடி மதிப்பில் செம்மொழி தமிழாய்வு நிறுவனம் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் மின்னணு நூலகம், உள்பட 12 பிரிவுகளுடன் பிரமாண்டமான கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.