சிதம்பரம்:
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விடுதி மாணவிகள் 40க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், விடுதி மூடப்பட்டது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் பல்வேறு விடுதிகள் உள்ளன. இதில் பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் கல்லூரிகளுக்கு வருகிற 31ந் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் பெரும்பாலான மாணவர்கள் விடுதிகளை காலி செய்து விட்டு சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர்.

இந்நிலையில் பல்கலைக் கழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த துறை மாணவிகள் சிலர் விடுதிகளில் தங்கி உள்ளனர். சிதம்பரம் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தாமரை இல்லம் விடுதி மற்றும் மருத்துவ கல்லூரி வளாகத்தில் உள்ள லிரு விடுதி உள்ளிட்டவற்றில் தங்கி படித்த மாணவிகள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

கடந்த சில தினங்களில் அடுத்தடுத்து மருத்துவத் துறை படிப்பு சார்ந்த மாணவிகள் சுமார் 40 பேருக்கும் மேல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து மாணவிகள் தங்கியிருந்த தாமரை இல்லம் மூடப்பட்டது. இங்கு தங்கியிருந்த மாணவிகள் வேறு ஒரு விடுதிக்கு மாற்றப்பட்டு உள்ளனர். இதனிடையே பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி இளநிலை மாணவர்களுக்கு, நாளை முதல் 23ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்து பதிவாளர் சீத்தாராமன் உத்தரவிட்டுள்ளார். மேலும் விடுதி மாணவர்கள் உடனடியாக காலி செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.