சென்னை
வரும் ஜனவரி 17 ஆம் தேதி அன்று தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதையொட்டி கடந்த 7 ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமலாக்கப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அமலாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று தமிழக அரசு மேலும் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை ஜனவரி 31 வரை நீட்டித்துள்ளது.
இந்நிலையில் பொங்கல் பண்டிகை வரும் 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பலரும் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல வசதியாக அரசு சிறப்புப் பேருந்துகளை இயக்கி வருகிறது. ஆனால் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு காரணமாக அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. எனவே வெளியூர் சென்றவர்கள் ஞாயிறு அன்று சென்னைக்குத் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசு வரும் 18 ஆம் தேதி அன்று தைப்பூசத்தை முன்னிட்டு விடுமுறை அறிவித்துள்ளது. எனவே பல்வேறு தரப்பினரும் திங்கட்கிழமையான ஜனவரி 17 ஆம் தேதி அன்று விடுமுறை அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். எனவே அரசு அதைக் கருத்தில் கொண்டு திங்கள் கிழமை அன்று மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.
மேலும், இந்த விடுமுறை உள்ளூர் விடுமுறையாக அறிவித்த தமிழக அரசு அதற்கு பதிலாக ஜனவரி 29 ஆம் தேதி சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவித்துள்ளது.