புதுச்சேரி
கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாகப் புதுச்சேரியில் 1 முதல் 9 வகுப்புக்களுக்குப் பள்ளிகள் மூடப்படுகிறது.
புத்தாண்டு கொண்டாட்டத்துக்குப் புதுச்சேரி அரசு அனுமதி அளித்ததற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் மூலம் கொரோனா பரவல் அதிகரிக்கும் என அச்சம் தெரிவித்தனர். புதுச்சேரி சிறிய மாநிலம் என்றாலும் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்தோர் புதுச்சேரி வந்து புத்தாண்டை கொண்டாடினார்கள்.
மக்களின் அச்சத்தைப் போலவே புத்தாண்டு கொண்டாட்டம் நடந்ததில் இருந்து கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தது. 1 ஆம் தேதி அன்று 10 பேராக இருந்த கொரோனா பாதிப்பு 444 வரை உயர்ந்தது. இதையொட்டி புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தியது.
அப்போது கொரோனா அதிகரிப்பால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கபட்டது. அதை ஏற்றுக் கொண்ட கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளிகளும் 1 முதல் 9 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மூடப்படுகிறது என அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு நாளை முதல் அமலாகிறது. மாணவர்களுக்கு ஆனலைன் மூலம் மட்டும் வகுப்புக்கள் நடைபெற உள்ளன. தவிர 10, 11, 12 ஆம், வகுப்புக்கள் குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லை என்றாலும், இந்த வகுப்புக்களுக்குச் சுழற்சி முறையில் வகுப்புக்கள் நடைபெறலாம் என எதிர்பார்ப்பு உள்ளது.