சென்னை

ன்று தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இன்று முழு ஊரடங்கு அமலாக்கப்பட்டுள்ளது.  இந்த முழு ஊரடங்கின் போது காய்கறி, மளிகை, இறைச்சிக் கடைகள், வணிக அரங்குகள், திரையரங்குகள் திறக்கப்பட மாட்டாது.   பொதுப் போக்குவரத்து, மெட்ரோ ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.  புறநகர் மின்சார ரயில்கள் குறைந்த அளவில் இயக்கப்படுகின்றன.

இருப்பினும் இன்று முழு ஊரடங்கின் போது திருமணம் போன்ற குடும்ப நிகழ்ச்சிகளுக்குச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  இந்நிகழ்ச்சிகளுக்குச் செல்வோர் திருமண அழைப்பிதழைக் காண்பித்து தங்களது பயணங்களை மேற்கொள்ளலாம். இவ்வாறு முழு ஊரடங்கு நாட்களில் நடைபெறும் திருமணம் போன்ற விழாக்களுக்குச் செல்பவர்களுக்கு காவல்துறை அனுமதி வழங்கும். மேலும் திருமண மண்டபத்தில் 100 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

தமிழகத்தில் முழு ஊரடங்கை ஒட்டி இன்று டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகளைக் கண்காணிக்கத் தமிழகம் முழுவதும் 60,000 காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.   ஊரடங்கு காரணமாக மக்கள் வெளியே வராததால் பல முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.